வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் - தினேஷ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் - தினேஷ் குணவர்தன

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சித் தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, இரத்துச் செய்யப்படவில்லை. ஆகவே தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவு வழங்க கொள்கை மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளேன். தேர்தல் சட்டங்களுக்கு அமையவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைத்துள்ளதே தவிர இரத்துச் செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அடுத்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனால் தேர்தல் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும். குறித்த அரச ஊழியர்கள் தமது தேர்தல் தொகுதியில் அல்லாது அதனை அண்மித்த வேறு பகுதியில் பணிக்கு செல்ல முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரச சேவையாளர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. உரிய வழிமுறைக்கு அமைய அமைச்சரவைப்பத்திரம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment