ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இன்று ! எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் சில கட்சிகள் ! நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 27, 2023

ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இன்று ! எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் சில கட்சிகள் ! நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் !

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ளது.

வாக்கெடுப்பின்போது இணக்கப்பாட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு எதிர்த்தரப்பினரதும் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் ஆரம்பம் முதலே முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

இலங்கையின் பொருளாதார மீட்புக்கான விரைவான நிலைமாற்றத்தினை அடைவதற்காகவும் அதனைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் நலன் பயக்கும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளமையால், இது குறித்த விவாதம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆரம்பமானது. இந்நிலையிலேயே விவாதத்தின் இறுதி நாளான இன்றையதினம் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளையே அறிவித்துள்ளன.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன இந்த தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோன்று அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவையும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

எவ்வாறிருப்பினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்கின் போதிலும், ஒப்பந்தத்தில் காணப்படும் கடுமையான நிபந்தனைகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்த்தரப்பினைப் பிரதிநிதித்துவப்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இதனையே தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவே குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பினை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் எதிர்த்தரப்பினரதும் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் இணக்கப்பாட்டு ஒப்பந்த ஏற்பாடுக்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment