சட்டக் கல்லூரி அதிபரை பாராளுமன்ற சிறப்புரிமைகள், ஒழுக்கவியல் குழுவிற்கு அழையுங்கள் - சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

சட்டக் கல்லூரி அதிபரை பாராளுமன்ற சிறப்புரிமைகள், ஒழுக்கவியல் குழுவிற்கு அழையுங்கள் - சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

(எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

சட்டக் கல்லூரி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும் மொழி உரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுத்த தீர்மானம் இதுவரை அமுல்ப்படுத்தப்படவில்லை. பாராளுமன்றதின் தீர்மானங்களை புறக்கணித்து ஒரு தரப்பினர் சட்டவாக்கத்துறைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஆகவே சட்டக் கல்லூரியின் அதிபரை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவிற்கு அழையுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, ஜயந்த சமவீர ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டதாவது, சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் நிதியமைச்சுக்கு பாராளுமன்ற அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நீதியமைச்சின் செயலாளர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, சட்ட ஆய்வு கவுன்சில் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செய்றபடவில்லை.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது புத்தாண்டு கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது, எதிர்வரும் 24 ஆம் திகதி சட்டக் கல்லூரி பரீட்சை இடம்பெறவுள்ளது, ஆகவே பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்றும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பாராளுமன்றத்தின் தீர்மானத்தை புறக்கணித்து ஒரு தரப்பினர் சட்டவாக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள், ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், இல்லாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் அமைதியற்ற தன்மை நிலவும் என்றார்.

இதன்போது எழுந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்தாமல் செயற்படுவது பாராளுமன்ற சிறப்புரிமை மீறலாக கருதப்படும். ஆகவே சட்டக் கல்லூரி அதிபரை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவிற்கு உடன் அழையுங்கள் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஜயந்த சமரவீர பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொறுப்பான தரப்பினர் செயற்படுத்தாமல் இருப்பது பாராளுமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் ஆகவே பொறுப்பான தரப்பினரை பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவிற்கு அழையுங்கள் என்றார்.

No comments:

Post a Comment