(எம்.மனோசித்ரா)
ஊடகவியலாளர்களை முடக்கும் கொள்கைகளை அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றாது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஆர்ப்பாட்டங்களின்போது ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை தொடர்பில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் ஊடகவியலாளர் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறித்த அடையாள அட்டை தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் போதுமான அவதானம் செலுத்தப்படும்.
எனினும் ஏதேனுமொரு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் அல்லது வேறு அழுத்தங்கள் காணப்பட்டால் அது குறித்து எமக்கு தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக ஊடகங்களை ஒடுக்கும் கொள்கையை அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றவில்லை. ஊடகவியலாளர்களை பாதுகாப்பது முக்கியத்துவமுடையது என்பதே எமது கொள்கையாகும் என்றார்.
No comments:
Post a Comment