இம்மாத இறுதிப் பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் : சகல தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து சட்டம் இயற்றப்படும் - பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

இம்மாத இறுதிப் பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் : சகல தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து சட்டம் இயற்றப்படும் - பிரதமர்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இம்மாத இறுதிப் பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சகல தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் சாதக, பாதக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

அரசியல் மற்றும் சிவில் தரப்பினரது நிலைப்பாடுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்து புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும்.

பாராளுமன்ற அமர்வு நாளை மறுதினம் கூடவுள்ளது, மூன்றாம் வாரத்தில் இடம்பெறும் கூட்டத் தொடரின்போது உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த சட்டத்தை அவசரமாக இயற்றும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது, முறையான வழிமுறைகளுக்கு அமையவே சட்டம் இயற்றப்படும்.

சம்பளமில்லாத அரச விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் உறுதியான தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சம்பளமில்லாத அரச சேவையாளர்கள் விடயத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்கது என்றார்.

No comments:

Post a Comment