சீன, அவுஸ்திரேலிய, அமெரிக்க நிறுவனங்களுடன் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தம் - அமைச்சர் காஞ்சன - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

சீன, அவுஸ்திரேலிய, அமெரிக்க நிறுவனங்களுடன் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தம் - அமைச்சர் காஞ்சன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பெற்றோலிய இறக்குமதி, விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கையெழுத்திடப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கமைய சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்க கடந்த மார்ச் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்நிலையிலேயே குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்திற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கல் தொடர்பில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. குறித்த 3 நிறுவனங்களுக்கும் தலா 150 வீதம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எமக்கு உரிமம் உள்ள 234 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தவிர்த்தே, மேற்கூறப்பட்ட நிறுவனங்களினால் மேலதிக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. இவற்றில் எமக்கு உரித்து காணப்படாது. மாறாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் அவை நிர்வகிக்கப்படும்.

இந்நிறுவனங்களுக்கும் எரிபொருள் விலை சூத்திரம் பொறுந்தும். விலை சூத்திரத்திற்கமைய அரசாங்கத்தினால் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும். ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் அவற்றால் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும். பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அதன் அடிப்படையில் தற்போதும் சுயாதீன நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment