இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் : IMF யிடம் உறுதியளிதுள்ள சீன பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 2, 2023

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை மேற்கொள்ளத் தயார் : IMF யிடம் உறுதியளிதுள்ள சீன பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான நிதியுதவி திட்டம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதிக கடன் சுமை கொண்ட நாடுகளுக்கு உதவுவது தொடர்பான பல்தரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக, சீன பிரதமர் லீ கெகியாங் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (01) புதன்கிழமை IMF நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா பங்கேற்கத் தயாராக உள்ளது என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமமான சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சிடம் கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருட அவகாசம் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு உச்சபட்ச பங்களிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment