நித்தியானந்தாவின் 'கைலாசா' என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகளின் ஐ.நா ஏற்பாடு செய்திருந்த ஜெனீவா கூட்டங்களில் பேசிய கருத்துக்களை நிராகரிப்போம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்தியாவைச் சேர்ந்த நித்தியானந்தா உருவாக்கியதாக அவரால் அழைத்துக் கொள்ளப்படும் கைலாசா என்ற சர்ச்சை தேசத்தின் பிரதிநிதிகள் சிலர், ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.
காரணம், இதுநாள் வரை எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த இந்த கைலாசாவின் பிரதிநிதிகள் ஐ.நா கூட்டத்தில் கைலாசா சேதத்தின் பிரதிநிதிகள் ஆக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்ற காட்சிகள், பரவலான கவனத்தை ஈர்த்தது.
இதனால், தங்களை ஐ.நா அங்கீகரித்து விட்டது போல நித்தியானந்தாவின் சீடர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் அந்த பிரதிநிதிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் ஒரு கற்பனையான நாட்டின் பிரதிநிதி பதிவு செய்த வார்த்தைகளை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
ஐ.நா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும் கைலாசா பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா அனுப்பிய பதில்
ஐ.நா அதிகாரி பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒஃப் கைலாசா (யுஎஸ்கே) பிரதிநிதிகள் பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் இரண்டு ஐ.நா கூட்டங்களில் கலந்து கொண்டனர்" என்று கூறியுள்ளார்.
முதலாவது கூட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பெப்ரவரி 22ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்ததாகும். அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டம், பெப்ரவரி 24ஆம் திகதி பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு (CESCR) நடத்திய நிலையான வளர்ச்சி குறித்ததாகும்.
"பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்று இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.
CEDAW கூட்டத்தில் யுஎஸ்கே வழங்கிய எழுத்துபூர்வ அறிக்கை "பொது விவாத தலைப்புக்கு பொருத்தமற்றது" என்பதால் அவர்களின் கருத்துகள், அறிக்கையில் சேர்க்கப்படாது என்று குவோக் மேலும் கூறினார்.
இரண்டாவது கலந்துரையாடலில் யுஎஸ்கே பிரதிநிதி ஒருவரின் கூற்று, நிகழ்ச்சிக்கும் தலைப்புக்கும் எட்டாத வகையில் இருந்ததால் அதுவும் கவனத்தில் கொள்ளப்படாது என்றும் குவோக் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐ.நா கூட்டத்தில் கலந்து கொண்ட கைலாசா பிரதிநிதியான விஜயப்ரியா நித்தியானந்தா, சுவாமி நித்யானந்த பரமசிவம் அவர் பிறந்த இடத்தில் சில இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்பட்டார் என்றே நான் கூறினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கைலாசா, இந்தியாவை மிக உயர்வாகக் கருதுகிறது என்றும் இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது என்றும் குறிப்பிட்டு காணொளியொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
ஐ.நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கமிட்டியின் கூட்டம் ஒன்றில் கைலாசாவின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட புகைப்படங்களை கைலாசா என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கைலாசாவை ஐ.நா அங்கீகரித்து விட்டது என்றும் கூறப்பட்டது.
ஐ.நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கமிட்டியின் கூட்டம் குறித்தான ஐ.நாவின் அதிகாரப்பூர்வக் காணொளியில், கைலாசாவின் பிரதிநிதி என்று கூறும் ஒருவர் பேசியதை பார்க்க முடிகிறது.
அவர், “நான் இங்கு கைலாசாவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்கிறேன். நான் ஐ.நாவுக்கான நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்தியானந்தா, கைலாசா என்பது இந்துக்களுக்கான முதல் இறையாண்மை நாடு. இந்துக்களின் உயரிய தலைவர் நித்தியானந்த பரமசிவத்தால் நிறுவப்பட்டது கைலாசா.” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்து மதத்தின் பழமையான பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்காக நித்தியானந்தா துன்புறுத்தல்களை அனுபவிக்கிறார். அவர் போதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; தான் பிறந்த நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்தார்.
ஐ.நாவின் இந்த கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் பெயரில் கைலாசா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் ஐ.நாவின் 193 நாடுகளின் பட்டியலில் கைலாசா நிச்சயம் இல்லை.
அதேபோல ஐ.நாவின் சில கிளை அமைப்புகளின் கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நாட்டின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
‘கைலாசா என்னும் நாடு’
இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதான அறிவிப்பை 2019ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா.
கைலாசாவின் இணையத்தளமாக குறிப்பிடப்படும் https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சொற்பொழிவு காணொளி ஒன்றில் கைலாசாவிற்கு எப்படி வர வேண்டும் என்ற தகவலை நித்தியானந்தா வெளியிட்டிருந்தார்.
அதில் கைலாசாவிற்கு வர முதலில் அவுஸ்திரேலியாவிற்கு வர வேண்டும். பின்பு அங்கிருந்து கைலாசாவிற்கு வர கைலாசாவிற்கு சொந்தமான பல தனியார் விமான சேவைகள் உள்ளன. அங்கிருந்து நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள் என தெரிவித்திருந்தார்.
ஒரு நாட்டை அவ்வளவு எளிதாக உருவாக்கிவிட முடியுமா?
ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் மக்கள், எல்லை, அரசாங்கம், இறையாண்மை அடிப்படையில் மற்ற அரசுகளுடன் உறவுகளைப் பராமரிக்கும் தன்மை ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.
மக்கள் என்பதற்கான வரையறை மிகுந்த சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. தங்கள் நாட்டின் தேசியத்துவம் மீது நம்பிக்கை கொண்ட, கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட நிரந்தரமாக வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
அடுத்ததாக ஒரு நாடு என்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்க வேண்டும். மூன்றாவதாக தன்னை ஒரு அரசு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் சிறப்பான அரசாங்க அமைப்பு இருக்க வேண்டும். அதாவது அந்த நாடு எந்த நாட்டையும் சாரத ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்டதாக இருக்க வேண்டும். இறுதியாக மற்ற நாடுகளுடன் நல்லுறவை பேணும் தன்மை இருக்க வேண்டும்.
ஆனால் இந்த அடிப்படையான நான்கு அம்சங்களை தவிர்த்து ஒரு நாடு அமைக்க பல படிநிலைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
அதேபோல ஒரு நாடு மற்றொரு நாட்டை அங்கீகரித்து கொள்ளலாம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை பெற்றால்தான் அந்த நாட்டிற்கு பல ஆதாயங்கள் கிடைக்கும்.
தன்னைதானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா, தமிழ் நாட்டில், திருவண்ணாமலையில் பிறந்தவர்.
01.01.1978 அன்று அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு பிறந்தவர் நித்யானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன்.
12 வயதில் ராமகிருஷ்ண மடத்தில் இவர் கல்வி கற்கத் துவங்கியுள்ளார். பள்ளி படிப்பை 1992ஆம் ஆண்டில் முடித்தவர் நித்யானந்தா.
நித்தியானந்தா மீது உள்ள வழக்குகள்
பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.
நித்தியானந்தா மீது பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
2012 இல், நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு எழுந்தபோதும் அவர் தலைமறைவானார். ஆனால் பிறகு தானே முன்வந்து சரணடைந்ததால் நீதிமன்றக் காவலில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர் தலைமறைவாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையில் நித்யானந்தா தனது பெண் சிஷ்யையை பாலியல் வல்லுறவு செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுமிகள் இருவரை கடத்தி தனது அகமதாபாத் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு பிறகு நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவர் குறித்து நாடுகள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர வேண்டும் என இன்டர்போல் அறிவித்தது.
பாலியல் வல்லுறவு, ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்யானந்தா.
No comments:
Post a Comment