(இராஜதுரை ஹஷான்)
மின் கட்டண உயர்வுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன். அரசியல் அழுத்தம் சுயாதீன பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை ஆக்கிரமித்துள்ளது. நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது, ஆகவே நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர இறுதித் தீர்வு ஏதும் தற்போது இல்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்பினார். மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்சாரத்துறை அமைச்சரின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாதபோது ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து முறையற்ற வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
37 சதவீத மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க ஆணைக்குழு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு முரணாக 66 சதவீதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் கட்டண அதிகரிப்புக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த இணக்கத்தை தெரிவிக்கவில்லை.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தனிப்பட்ட முறையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன். அரசியல் அழுத்தம் சுயாதீன ஆணைக்குழுவை ஆக்கிரமித்துள்ளது.
நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது, ஆகவே நாட்டு மக்களுக்காக இது எனது இறுதி போராட்டமாக இருக்கும், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர இறுதித் தீர்வு ஏதும் கிடையாது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல் முன்னெடுத்தேன். ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தும் வரை சட்டத்திற்கு அமையவே செயற்படுவேன் என்றார்.
No comments:
Post a Comment