பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என். ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கீழ் குறித்த அமைச்சு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 மார்ச் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.டி.என். ரஞ்சித் அசோக 1990 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த, இலங்கை நிர்வாக சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியாவார்.
இதற்கு முன்னர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய நீல் பண்டார ஹபுஹின்ன, குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பதவிக்கு அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இவ்வருடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை பெற வேண்டாமென அவர் பொது நிர்வாகச் செயலாளராக இருந்தபோது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து சுற்றுநிருபம் அனுப்பியிருந்த நிலையில் அதனை அவர் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
குறித்த விடயம், சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததோடு, பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் நீல் பண்டார ஹபுஹின்ன இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment