தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் வெளியிட்ட தகவல், நிதி சேகரிப்புக்கான ஓர் அறிவிப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இந்த நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்கான கூட்டம் சுவிட்ஸர்லாந்து நாட்டிலேயே முதன் முதலில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகவும், அவருடைய வாழ்வாதாரத்துக்காக நிதி சேகரிக்கப் போவதாகவும் அந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒருவர், பிரபாகரனின் மகளைப் பார்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும், அந்த நபரின் மகளும் பிரபாகரனின் மகளும் ஒன்றாகப் படித்தவர்கள் எனவும் சித்தார்த்தன் கூறினார்.
இதனையடுத்து அந்த நபர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு பிரபாகரனின் மகள் என ஒரு பெண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.
பிரபாகரன் மகள் என்றவரிடம் தொடுக்கப்பட்ட கேள்வி
அந்தப் பெண்ணிடம் சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்றவர், 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தந்தவர் யார்' என கேட்டுள்ளார்.
”பிரபாகரனின் மகளுக்கு யார் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் என்று சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்ற நபருக்குத் தெரியும்.
புலிகளின் பெண்கள் படையொன்றிலுள்ள ஒருவர்தான் பிரபாகரனின் மகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்”.
”அந்தக் கேள்விக்கு பிரபாகரனின் மகள் எனக்கூறப்பட்ட பெண், தவறான ஒரு பதிலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், இந்த விடயத்தை உடனடியாக சுவிட்ஸர்லாந்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தி, அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை முறியடித்தார்". எனவும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.
கேவலமான நடவடிக்கை
தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், தான் அறிந்த வகையிலும் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக அறிவிக்கப்பட்டமையானது, நிதி சேகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்றவர்களும் தன்னிடம் இதையே சொன்னதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
"இது கேவலமானதும், மலினப்படுத்துகின்றதுமான ஒரு செயல்பாடாகும்" எனவும் அவர் மேலும் கூறினார்.
"தம்பி பிரபாகரன் மீது நான் மதிப்பு வைத்துள்ளேன். காரணம், அவர் தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அர்ப்பணித்தவர் என்பதனாலாகும். அந்த அர்ப்பணிப்புகளை மலினப்படுத்தி, நாலு பேர் சீவியம் நடத்துவதற்காக பணம் சேர்க்கும் வேலையாகவே இது உள்ளது" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
"பழ. நெடுமாறன் எங்களுடனும் நெருக்கமாக இருந்தவர். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் கூறியதை, பின்னர் 'சொன்னார்கள், சொன்னேன்' என, அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதாவது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று, யாரோ சொல்லச் சொன்னதை அவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் சித்தார்த்தன்.
இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு பேசியபோது; புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அவர்களின் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தராக இருந்த ஒருவரும், சுவிஸர்லாந்தில் நடத்தப்பட்ட நிதி சேகரிப்புக்கான கூட்டத்தில் பங்கேற்றிருந்தாக கூறினார்.
பிரபாகரன் ஒளிந்திருக்கும் ஆள் இல்லை
"யுத்தம் முடிந்து 13 வருடங்களாகி விட்டன. பிரபாகரனைப் பொறுத்த வரையில் இவ்வளவு காலம் அவர் ஒளிந்திருக்கும் ஒருவர் அல்ல".
"சரி, பிழைகளுக்கு அப்பால் தனி நாட்டுப் போராட்டத்துக்கு அவர் விஸ்வாசமாக இருந்தார். எங்கள் எல்லோரையும் விடவும் அவர் ஆகக்கூடியளவில் அதற்கு விஸ்வாசமாக இருந்தார். அது கேள்விக்கு அப்பாற்பட்டது".
"இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாங்கள் ஜனநாயக அரசியலுக்குத் திரும்பினோம். ஆனால், தனி நாட்டுக்காக கடைசி வரை பிரபாகரன் போராடினார்” என சித்தார்த்தன் கூறினார்.
தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை போராட்டத்துக்காக பிரபாகரன் அர்ப்பணித்தமைச் சுட்டிக்காட்டிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "தனது குடும்பத்தவர்களை வெளிநாட்டில் வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் பிரபாகரனுக்கு இருந்தது. அவர்கள் முன்பு டென்மார்கில் இருந்தார்கள். ஆனால், அவர்களை பிரபாகரன் பின்னர் தன்னிடம் அழைத்துக் கொண்டார்" என்றார்.
இவ்வாறான ஒரு மனிதர் இவ்வளவு காலமும் ஒளிந்து கொண்டு இருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்களுடைய உடல்களை கண்டு, அவற்றினை ஏற்றுக் கொண்டவர்கள், பிரபாகரனின் உடலை அவருடையதுதான் என ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என கேள்வியெழுப்பும் அவர், "பிரபாகரனின் மரணத்தை ஏன் பொய் எனக் கூறுகின்றனர்?" எனவும் வினவினார்.
பிரபாகரனின் உடலைப் பார்த்த பலர், அது அவரின் உடல் என கூறியுள்ளனர் எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
ஆயுத போராட்டத்தை இனி இந்தியா ஆதரிக்காது
மறுபுறமாக, பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வைத்துக் கொண்டாலும், அவரால் பழையபடி புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைக்க முடியாது என சித்தார்த்தன் கூறுகின்றார். "அவருடைய வயது அதற்கு முக்கியமான தடையாக இருக்கும். வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை, அங்குள்ள இளைஞர்களின் மனநிலை, ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் கட்டுப்பாடு போன்றவற்றைத் தாண்டி, அங்கு ஒரு போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது" என்கிறார்.
இவற்றுக்கெல்லாம் அப்பால், இந்தியாவின் பின்புலம் இருந்தமையினால்தான் தமிழர் போராட்ட இயக்கங்களை இலங்கையில் கட்டியெழுப்ப முடிந்தது என்று குறிப்பிட்ட அவர், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வித்தியாசமாக உள்ளது என்கிறார்.
"இனி தமிழர் தரப்பிலிருந்து ஆயுதப் போராட்டம் நடப்பதை ஆதரிப்பதற்கான சமிக்ஞைகளை இந்தியா காட்டாது என நான் நம்புகிறேன்" எனவும் தெரிவித்தார்.
"இந்தியா தற்போது தனது பலத்தை பொருளாதார ரீதியில்தான் காட்ட விரும்புகிறது. தமிழ் நாட்டிலுள்ளவர்களில் குறைந்தளவானவர்களே ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
பெரும்பான்மையானோர் மனதளவில் முழுமையாக மாற்றமடைந்துள்ளார்கள். அங்கு மேல் நடுத்தர வர்க்கத்தினர் (Upper middle class) அதிகளவில் உள்ளனர். பொதுவாகவே இந்த வர்க்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதுமில்லை, அக்கறையும் காட்டுவதில்லை" என, தனது கருத்துக்கான நியாயங்களை அவர் முன்வைத்தார்.
இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டு மக்களிடம் ஓர் அனுதாப உணர்வு உள்ளதாக கூறும் சித்தார்த்தன், அவர்களில் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்கிறார்.
"இலங்கைத் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிட்ட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆயுதப் போராட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்". என்றார்.
இனப் பிரச்சினை விவகாரத்தில் தமிழர்களுக்கான உடனடித் தீர்வாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "13ஆவது திருத்தமும், மாகாண சபை முறைமையும்தான் தமிழர்களுக்கான தீர்வு என்று நான் கூறவில்லை. இருந்தபோதும், தமிழர்களுக்கு ஓரளவு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாக 13ஆவது திருத்தமே உள்ளது" என்றார்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கே சிங்கள அரசியல்வாதிகளிடம் இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் நிலையில், 70 வருடங்களாக தமிழர்கள் கோரி வரும் சமஷ்டி அமைப்பை வென்றெடுப்பது எவ்வளவு கடினமான விடயம் என - தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அதற்காக அந்தக் கோரிக்கையை நாம் கைவிட மாட்டோம்" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்.
BBC
No comments:
Post a Comment