நுவரெலியா விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி! - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

நுவரெலியா விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா - நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். 

இதில் உயிரிழந்த  குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 லட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது .

மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ்ஸொன்று நானுஓயா, ரதல்ல - குறுக்கு வீதி பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவை மோதித் தள்ளியதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநரும் உயிரிழந்தனர்.

வேனில் பயணித்தவர்களில் படுகாயமடைந்த சிறுமியொருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரின் எதிர்கால நடவடிக்கைக்காக வங்கியில் 8 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், சிறுமிக்கான கொடுப்பனவு உட்பட இந்த உதவித் திட்டத்துக்காக தேர்ஸ்டன் கல்லூரியால் 17 லட்சம் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கொலபொடவிடம் மேற்படி உதவித் தொகை, கல்லூரி அதிபரால், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதானி, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment