(நா.தனுஜா)
நிவாரணங்களையும், சலுகைகளையும் வழங்குவது நாம் தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது. எம்மால் குறைந்த வட்டி வீதங்களைப் பேணியவாறு தொடர்ந்து நிலைத்திருக்கவோ, முன்நோக்கிப் பயணிக்கவோ முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பட்டயக்கணக்காய்வுக்கற்கை மாணவர்களின் 37 ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார ரீதியில் புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமேயானால், தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறான முறையில் இசைவாக்கமடைந்து முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, வட்டி வீதங்களும், வரி அறவீடும் உயர்வடைந்திருப்பதன் விளைவாகத் தாம் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகப் பலர் கூறுவதை என்னால் அடிக்கடி கேட்க முடிகின்றது. ஆனால் இனிமேலும் குறைந்த வட்டி வீதங்களைப் பேணியவாறு எம்மால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள் முகங்கொடுக்கக் கூடிய நெருக்கடிகளைக் குறைத்து, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்குரிய இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வங்கி முன்னெடுத்து வருகின்றது.
நாம் ஏற்கனவே இருந்த நிலையை விடவும் தற்போது முன்னேற்றமடைந்திருப்பதைப் போன்று, எமக்கு நிதியுதவி கிடைக்கப் பெற்றதன் பின்னர் மேலும் சிறந்த நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது புதியதோர் பயணத்தின் ஆரம்பம் மாத்திரமே என்பதையே என்னால் கூற முடியும்.
ஏனெனில் நிவாரணங்களையும், சலுகைகளையும் வழங்குவது நாம் தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வல்ல. எனவே நாம் தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இசைவாக்கமடைந்து முன்நோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியமாகின்றது. மாறாக தற்போதைய நிலையை விடவும் பின்நோக்கிச் செல்லக் கூடாது. அதனை மனதிலிருத்தியே நாம் அனைத்துச் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment