மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கடன் கேள்விப்பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு வேலைநிறுத்தங்களால் தடை ஏற்படுமானால், தனியார் துறை வங்கிகளில் வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்காக அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை நடைபெற்றுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நிதி அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், மேற்படி வைப்புக் கணக்ைக தனியார் வங்கிகளில் ஆரம்பிப்பதற்கு இடமளிப்பது தொடர்பில் அங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாமற் போனால், கடன் பத்திரம் விநியோகித்தல் உள்ளிட்ட நிதி விடயங்கள் அனைத்தும் சீர்குலைவதற்கு சந்தர்ப்பம் உள்ளமை தொடர்பில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கேள்விப்பத்திரம் திறக்க முடியாத நிலை ஏற்படலாம்.
இந்நிலையில், நிதியமைச்சின் அனுமதியுடன் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த முறைமையில் தனியார் வங்கிகளில் வைப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துலகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment