மாகும்புர மத்திய நிலையத்தினூடாக சகல பஸ்களும் செல்வது கட்டாயம் : அமைச்சர் பந்துலவின் ஆலோசனைக்கமைய திட்டம் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 2, 2023

மாகும்புர மத்திய நிலையத்தினூடாக சகல பஸ்களும் செல்வது கட்டாயம் : அமைச்சர் பந்துலவின் ஆலோசனைக்கமைய திட்டம் ஆரம்பம்

"ஹைலெவல்" பாதையில் பயணிக்கும் சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களும் மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தினூடாகச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹைலெவல் பாதையில் பயணிக்கும் சில பஸ் வண்டிகள், மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தினூடாக பயணிக்காததால், பொதுமக்களும் மற்றும் சாரதிகளுக்கும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 

இதனை கவனத்திற் கொண்டு போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வழங்கிய ஆலோசனைகமைய நேற்றைய தினம் முதல் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தின் முன்பாக உள்ள பாதையில் முறையற்ற விதத்தில், பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லல் மற்றும் இறக்கி விடல் காரணமாக காணப்பட்ட பாரிய நெரிசல், இதனால், நீங்கியுள்ளதோடு பயணிகள் முகம் கொடுத்து வந்த அபாய நிலைமையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மாகும்புமற பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் பிரயாணிகள் மற்றும் பஸ்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முறையாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு மிகவும் சொகுசான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடிந்துள்ளது.

இவ்விதிகளை மீறுபவர்களை அடையாளம் காண்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் அணியும் மற்றும் போக்குவரத்து பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டங்களை மீறும் பஸ்கள் தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஹைலெவல் வீதியில் பயணிக்கும் பஸ் வண்டிகள் மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையமூடாக பயணிப்பதற்கான திட்டமொன்றை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முறைமை மிக சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுவதாகவும் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டோ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரையின் கீழ், நேற்று இந்த பல்வகை போக்குவரத்து முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பஸ் வண்டிகளும் இந்த மத்திய நிலையமூடாகவே நேற்று பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி நிலையால், பொதுமக்கள் வாகன உரிமையாளர்களும் நீண்ட காலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்நெருக்கடியை நீக்கும் வகையிலும் எரிபொருளை மீதப்படுத்தும் வகையிலும் அத்துடன் மாசுகளற்ற விதத்தில் பிரயாணிகளினதும் வாகனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய பல்வகைப் போக்குவரத்து முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment