கம்போடியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான கேம் சோகாவுக்கு, தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் 27 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தற்போது கலைக்கப்பட்டுவிட்ட, கம்போடிய தேசிய மீட்புக் கட்சியின் முன்னாள் தலைவராக விளங்கியவர் கேம் சோகா (69).
2013 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்தி உரையொன்றில், தனக்கு அமெரிக்க ஜனநாயக ஆதரவுக் குழுக்களின் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, பிரதமர் ஹுன் சென்னின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து சதி செய்த குற்றச்சாட்டில் 2017 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இக்குற்றச்சாட்டுகளை கேம் சோகா நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கேம் ஷோவுக்கு 27 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1985 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் பதவியிலுள்ள ஹுன் சென், உலகில் நீண்ட காலமாக ஆட்சியிலுள்ள தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
இவ்வழக்குத் தீர்ப்பையொட்டி நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த கம்போடியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரிக் மார்ப்பி இவ்வழக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதிப்புக்குரிய அரசியல் தலைவரான கேம் சோகாவுக்கு விதிக்கப்பட்ட இத்தண்டனை அமெரிக்காவை ஆழ்ந்த கவலையடையச் செய்கிறது என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தனி பிளின்கன் கடந்த ஆகஸ்ட் மாதம் கம்போடியாவுக்கு விஜயம் செய்தபோது, கேம் சோகாவை சந்தித்திருந்தார்.
கம்போடியாவின் ஜனநாயகம் குறித்த கரிசனைகளை பிரதமர் ஹுன் சென்னுடனான கலந்துரையாடலின்போது அவர் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment