பிரபாகரனின் பிள்ளை உட்பட மூவர் கொலை : 25 வருடங்களின் பின் இருவருக்கு மரண தண்டனை - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

பிரபாகரனின் பிள்ளை உட்பட மூவர் கொலை : 25 வருடங்களின் பின் இருவருக்கு மரண தண்டனை

ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபாகரனின் 03 வயது பிள்ளை உட்பட 03 பேரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சகலதும் எவ்விதமான சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்குப் பின்னர் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு ஈழவர் ஜனநாயக முன்னனி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் பிரபாகரனிள் 03 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர்கள் இருவரை கொலை செய்தமை, 04 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், கட்சி ஆதரவாளர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (29) புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த (ஈரோஸ்) கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கட்சி ஆதரவாளர் ஒருவரும் கட்சி செயலாளருடன் முரண்பட்டுக் கொண்டனர். 

இதனால், இவ்விருவரும் இணைந்து 1997-7-17 அன்று அலுவலகத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர் மீதும் குண்டு தாக்குதலையும் மற்றும் வாளால் வெட்டியும் தாக்குதலை நடத்தினர்.

இச்சம்பவத்தில் கட்சியின் செயலாளரின் 03 வயது பிள்ளையான கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். யோகநாதன் ஒரு கையையும் புவிராஜசிங்கம் இருகைகளையும் இழந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சமீல ரஜீந்தர, கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக நடைபெற்று வந்தன.

இவ் வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் (29) மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோதே இத்தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment