ஏற்றுமதி வருமானத்தை நிலையான மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், இவ்வருட முதல் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,000 மில்லியன் டொலரை விட அதிகரித்துள்ளது. இதனை, சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் பிரகாரம் இவ்வருட ஜனவரியில், வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,000.9 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதென்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதி வருமானமாக 1,100.9 டொலரைப் பெற முடிந்தது. மேலும், இவ்வருட ஜனவரியில், இவ்வருமானம் 8.98 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 6.97 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
ஆடை உற்பத்தித் துறை மூலமாகவே அதிக ஏற்றுமதி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆடை ஏற்றுமதியால் 423.13 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.
அத்துடன் 99.56 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதி மூலமும், 75.89 மில்லியன் அமெரிக்க டொலர் இறப்பர் உற்பத்திப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி மூலமும் கிடைத்துள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தைவிட அதிக ஏற்றுமதி அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 254.78 மில்லியனாகும்.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி வருமானம் 77.42 மில்லியன் அமெரிக்க டொலராகவும், இந்தியாவுக்கான ஏற்றுமதி வருமானம் 69.58 மில்லியன் அமெரிக்க டொலராகவும் ஜேர்மனிக்கான ஏற்றுமதி வருமானம் 48.12 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
அதனைவிட இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், பெல்ஜியம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment