குழந்தைக்கு பாலூட்டுவதாகக்கூறி தாலிக் கொடி திருட்டு : பெண்ணுக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

குழந்தைக்கு பாலூட்டுவதாகக்கூறி தாலிக் கொடி திருட்டு : பெண்ணுக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

பிள்ளைக்கு பாலூட்டுவதாகத் தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலிக் கொடியை களவாடிச் சென்ற சந்தேக நபரான பெண்ணை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லப்பர் வீதியிலுள்ள வீடொன்றினுள் இருந்த 8 பவுண் தாலிக் கொடி காணாமற் போயுள்ளதாக கடந்த சனிக்கிழமை (25) அன்று பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில் பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டேவிட் டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை (16) அன்று தாலிக் கொடி காணாமற் சென்றிருந்ததை அறிந்து உடனடியாக கடந்த சனிக்கிழமை (25) முறைப்பாட்டினை பாதிக்கப்பட்ட தரப்பினர் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த வீட்டில் வந்து செல்கின்ற நபர்கள் தொடர்பில் ஆராய்ந்த பொலிஸ் குழு இத்திருட்டு சம்பவத்தில் ஒரு குடும்பமே பின்னணியில் செயற்பட்டுள்ளதை அறிந்தது.

இதன் பிரகாரம் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய முதலில் குறித்த குடும்பத்தின் உறவு முறையிலான 40 வயதுடைய பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.

அடிக்கடி குறித்த வீட்டிற்கு வருகின்ற குறித்த சந்தேக நபர் சம்பவ தினமன்று தனது கைக் குழந்தைக்கு பாலூட்டுவதற்கு வெளிநபர்கள் இருப்பதனால் சங்கடமாக இருப்பதாக வீட்டுரிமையாளரான தனது உறவினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய வீட்டுரிமையாளர் குழந்தையை வீட்டினுள் எடுத்துச் சென்று பாலூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டினுள் சென்ற குறித்த சந்தேக நபரான பெண் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 பவுண் தாலிக் கொடியினை களவாடி அவ்விடத்திலிருந்து அகன்று சென்று விட்டார்.

பின்னர் வீட்டு உரிமையாளர் பாதுகாப்பாக இருந்த தாலிக் கொடி காணாமல் சென்றதை அறிந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸ் குழு சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபருக்கு ஒத்தாசையாகச் செயற்பட்ட அவரது தாய், தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தந்தை தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்து வருகின்றார்.

இத்திருட்டு சம்பவம் போன்றவற்றில் கிடைக்கின்ற தங்க ஆபரணங்களை தம்பி தனது தனிப்பட்ட தேவைக்காக விற்பனை செய்து வருவது பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன், குறித்த திருட்டினை 40 வயதுடைய சந்தேக நபரான பெண் ஏற்கனவே தனது சொந்தத் தேவைக்காக தன்னால் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டுக் கொள்வதற்கு இவ்வாறு களவாடியதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நகை திருட்டில் ஈடுபட்ட குறித்த சந்தேக நபரான பெண்ணிடம் நகைகளைப் பெற்று விற்பனை செய்த சந்தேக நபரும் கைதாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருடப்பட்ட தாலிக் கொடி உருக்கிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment