ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது : உத்தியோகபூர்வமாக அறிவித்தது அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது : உத்தியோகபூர்வமாக அறிவித்தது அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

பிரதான தேர்தல்கள் எவையும் இன்றி எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு வெளியிடப்படுகின்ற தகவல்கள் காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என்றும் அரசாங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஆளுந்தரப்பின் எம்.பிக்கள் சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு தமது ஒத்துழைப்பினைக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் அவ்வாறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவினுடைய பெயர் மாத்திரமின்றி, பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரது பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு ஊடகங்கள் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் இடம்பெறாமல் எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாட்டில் கடும் பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றமையானது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். இதற்கு ஊடகங்கள் முக்கியத்துமளிக்கின்றமையும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment