இலங்கையின் கடன் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை முன்னிறுத்திச் செயற்படத் தயார் : ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை முன்னிறுத்திச் செயற்படத் தயார் : ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் இணக்கம்

(நா.தனுஜா)

இலங்கையின் கடன் நெருக்கடி நிலைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி செயற்படத் தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 - 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன் வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது.

அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக் கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் 'கடன் இரத்திற்கு அப்பால் கடன் நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச் செயற்திட்டத்தை உருவாக்கல்' என்ற அடிப்படையின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அதேபோன்று அந்தப் பொதுச் செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக் கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்த வேண்டும்' என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment