(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களாணைக்கு அச்சமடைந்து தேர்தலை பிற்போட முயற்சிப்பதையிட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அடிப்படையில் போட்டியிட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. எந்த கட்சியும் இனி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயார் என பொது இடங்களில் குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் திரைமறைவில் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது.
தேர்தலை நடத்த நிதி இல்லை என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரில்லை. மக்களாணைக்கு செல்வதை தடுப்பதற்காக தேர்தலை பிற்போட முயற்சிப்பதையிட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மக்கள் ஆதரவு உள்ளது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment