"எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களை சமமாக நடத்துவோம், அவர்களின் உரிமையை பாதுகாப்போம்" - வைத்திய நிபுணர் ஜனக வேரகொட - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

"எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களை சமமாக நடத்துவோம், அவர்களின் உரிமையை பாதுகாப்போம்" - வைத்திய நிபுணர் ஜனக வேரகொட

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களை சமூகத்தில் ஓரங்கட்டாமல் சமமாக கருதி அவர்களின் சமத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஜனக வேரகொட தெரிவித்தார்.

டிசம்பர் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"டிசம்பர் 01 நடைபெறவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடாத்த உள்ளோம். இதன் நோக்கம் மக்களுக்கு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

குறிப்பாக பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே, இதன் நோக்கம்" என்றும் அவர் கூறினார்.

உங்கள் பாலியல் நோக்கு மற்றும் பாலியல் நடத்தை எதுவாக இருந்தாலும், பாதுகாப்பான முறையில் பாலியல் நடத்தையில் ஈடுபடுவது மிக அவசியம்.

உங்கள் துணையுடன் தவிர, வேறு எவரேனும் ஒருவருடன் நீங்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக ஆணுறையை பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக வைத்திய நிபுணர் ஜனக வேரகொட தெரிவித்தார்.

அத்துடன், தனது நிரந்தர துணை அற்ற ஒருவருக்கு வேறு துணைகள் இருக்கக் கூடும் என்பதனால், அவ்வாறானவர்களுடன் பாலியல் நடத்தைகளில் ஈடுபடும்போது, எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான ஏனைய நோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் உண்டு. எனவே, பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்த வேண்டும்.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் போன்றவர்களை சமூகத்தில் ஓரங்கட்டாமல் சமமாக கருதி சகல உரிமைகளையும் அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment