(எம்.மனோசித்ரா)
நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு, வெளிப்படைத் தன்மையுடனும் எமது கொள்கையுடனும் இணைந்து செயற்படக் கூடிய தரப்பினருடன் கூட்டணியமைப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இதுவரையில் அவ்வாறானதொரு கூட்டணியமைப்பது தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றிணை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளுடன் 43 ஆவது படையணி அரசியல் கூட்டணியில் இணைந்துள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இதுவரையிலும் எமது கட்சியினால் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் இணைந்து கூட்டணி அமைக்கப்படவில்லை. எனவே இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
எவ்வாறிருப்பினும் நாட்டின் தற்போதைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு காலத்திற்கு ஏற்ற வகையில் செயற்படும் அரசியல் சக்தியுடன் இணைந்து செயற்படக்கூடிய கூட்டணியை கட்டியெழுப்புவது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அதற்காக வெளிப்படைத் தன்மையுடன் எமது கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்படும் சக்தியுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment