செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : வீடு திரும்பினார் திலினி பிரியமாலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : வீடு திரும்பினார் திலினி பிரியமாலி

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை கடந்த 16ஆம் திகதி விடுவித்த கோட்டை நீதிவான் திலின கமகே, அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்தும் உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந் நிலையில், செவ்வாய்கிழமை (27) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட திலினி பிரியமாலி, விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கோட்டை நீதிமன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலினி, கையெழுத்திட்டதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்து செல்லப்ப்ட்டிருந்தார். அவர் சிறையில் தொலைபேசி பயன்படுத்திய விவகார விசாரணை நடப்பதால் இவ்வாறு அவர் அழைத்து செல்லப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணையில் இருப்பதால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

'அனைத்து வழக்குகள் தொடர்பிலும் அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடக்கும் நிலையில் அது தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டார்' என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிட்டார்.

முன்னதாக இதே மோசடி விவகாரத்தை மையபப்டுத்தி 7 வழக்குகளில் கோட்டை நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி பிணையளித்தது.

எனினும் ஒரு வழக்கில் அவருக்கு பிணையளிக்க மறுத்த நீதிவான் திலின கமகே, அவரை அவ்வழக்கு தொடர்பில் கடந்த 16ஆம் திகதி பிணையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment