(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கை தவறு என சுட்டிக்காட்டும் ஜனாதிபதி புதிய பொருளாதார கொள்கை தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது. தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பளித்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் அரசாங்கத்திற்கு காலவகாசம் வழங்குவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நீண்ட கால அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையின் பிரதிபலன் நாட்டு மக்களுக்கு தாக்கம் செலுத்தியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார பாதிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி என்றதொரு கட்சி இல்லாமலிருந்தால் இந்த பொருளாதார பாதிப்பு தோற்றம் பெற்றிருக்காது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார பாதிப்புக்கு நாங்கள்தான் காரணம் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அவர் கருத்துரைத்துள்ளார்.
1972 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திற்கு முன்னரான பொருளாதார கொள்கை முறையற்றது என ஜனாதிபதி குறிப்பிட்டார். 1978 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையும் தோல்வியடைந்துள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்படவில்லை, தோல்வி என ஏற்றுக் கொண்ட பொருளாதார கொள்கையுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்கள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச நிர்வாகத்திற்கு தேவையான ரூபாவையும், வெளிநாட்டு கையிருப்பையும் முறையாக திரட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றன.
அரச வருமானம் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை, அரசாங்கத்திற்கு சார்பான தரவுகள் மாத்திரம் வெளியிடப்படுகின்றன.
2021ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட அரச வருமானத்தை காட்டிலும், 2023 ஆம் ஆண்டு மூன்று மடங்கு அரச வருமானத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்களுக்கான தரவுகளில் உண்மை தன்மை கிடையாது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்தற்கு புதிய பொருளாதார கொள்கைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் நாட்டில் ரூபா மற்றும் டொலர் நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் கடன் பெறல், தேசிய வளங்களை விற்றல் ஆகியவற்றை பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பல் தரப்பு கடன்களும், சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து இரு தரப்பு கடன்களும், பங்களாதேஷ், சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து கைமாற்றல் கடன்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு 4.9 ரில்லியன் அரசமுறை கடனை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. நாட்டின் மொத்த கடன் தொகையின் உண்மை விபரத்தை நிதியமைச்சு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது.
வெளிநாட்டு கையிருப்பை அதிகளவில் ஈட்டிக் கொள்ள அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் ஏதும் கிடையாது. 2022ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் 12.5 பில்லியன் டொலராக காணப்பட்டபோது இறக்குமதிக்கான செலவு 20.6 பில்லியன் டொலராக காணப்பட்டது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பற்றாக்குறை 8.1 பில்லியன் டொலராக காணப்பட்டது, ஆகவே ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை. பொருளாதார மீட்சிக்கான அனைத்து மார்க்கங்களும் தடைப்பட்டுள்ளன.
வரையறையற்ற வகையில் பெற்றுக் கொண்ட அரசமுறை கடன்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
பெற்றுக் கொண்ட அரசமுறையை செலுத்த முடியாது என அறிவித்ததை தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு செலுத்த வேண்டிய அரசமுறை கடன் 3.2 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ளது.
பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த மார்ச் மாதம் அரச முறை கடன் தவணையை செலுத்திக் கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது, ஆனால் தற்போது அரச முறை கடன் தவணையை செலுத்தாமல் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது, ஆகவே பொருளாதாரம் இன்னும் ஸ்திரமடையவில்லை.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடன் பெறுவதையே இந்த வரவு செலவுத் திட்டம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. பொருளாதார கொள்கை தவறானது என குறிப்பிடும் ஜனாதிபதி அந்த கொள்கையை மாற்றியமைக்க அவதானம் செலுத்தவில்லை.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது என குறிப்பிட்டுக் கொண்டு விற்பதை அரசாங்கம் பிறிதொரு மார்க்கமாக கொண்டுள்ளது. வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கு இலாபமடையும் அரச நிறுவனங்களை விற்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை அரசாங்கம் இல்லாதொழித்துக் கொள்கிறது. இலாபமடையும் அரச நிறுவனங்களை விற்பதற்கு தான் இணங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார், ஆனால் அவர் வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிப்பார்.
நாட்டில் தேசிய கைத்தொழில் துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆடைக் கைத்தொழில் சேவை 14 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. நிர்மாண கட்டுமான துறை பாதிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் நாட்டில் தொழிலின்மை வீதம் உயர்வடையும். படித்த தரப்பினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். நாடு அறிவார்ந்த தரப்பினரை இழந்து வருகிறது. நாட்டில் உணவு, மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. நடுத்தர மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். சமூக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடி நிலையின் உண்மை தரவுகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை.
மக்களின் அங்கிகாரத்துடன் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதளவும் கிடையாது. பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரான தலைவரை தெரிவு செய்துள்ளது. மக்கள் ஆதரவுடன் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.
புதிய அரசியலமைப்பு அவசியம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கத்துடன் சகல பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பௌத்த மத அற கருத்துக்களை பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார், ஆனால் சமூக கட்டமைப்பு முழுமையாக சீரழிந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தினால் தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.
No comments:
Post a Comment