இணையவுள்ளவர்கள் யார் என்பது அரச இரகசியம் என்கிறார் மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

இணையவுள்ளவர்கள் யார் என்பது அரச இரகசியம் என்கிறார் மைத்திரி

(எம்.மனோசித்ரா)

மத்திய குழுவின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் இணைந்தவர்களை விட சிறந்த நபர்கள் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைவர். ஆனால் அவர்கள் யார் என்பது அரச இரகசியமாகும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் இணைந்தவர்களை விட சிறந்தவர்கள் எம்முடன் இணையவுள்ளனர். அவர்கள் யார் என்பது அரச இரகசியமாகும்.

நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகவே உள்ளோம். எமக்கு தேர்தலில் தனித்து போட்டியிடக்கூடிய இயலுமையையும் உள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது பல கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே எதிர்காலத்தில் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே நான் தனியொரு பாதையில் பயணிக்கப் போவதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதொரு விடயமாகும்.

ஒரு சிலர் குறிப்பிடுவதைப் போன்று எனது மகனை அரசியலுக்குள் அல்லது கட்சிக்குள் அழைத்து வர நான் எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறு எண்ணியிருந்தால் சுதந்திர கட்சியின் இளைஞர் அணியில் ஏதாவதொரு பதிவியில், அல்லது கட்சியின் உயர் பதவிகளுக்கு நியமித்திருக்க முடியும். ஆனால் தற்போது சுதந்திர கட்சி எந்தளவிற்கு ஜனநாயகமாக செயற்படுகிறது என்பதை உணர முடியும் என்றார்.

No comments:

Post a Comment