வெளிநாட்டவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிப்பது பாரதூரமானது : ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது நகைச்சுவையானது என்கிறார் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

வெளிநாட்டவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிப்பது பாரதூரமானது : ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது நகைச்சுவையானது என்கிறார் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டை குடியுரிமை உடையவரல்ல. அவர் வெளிநாட்டவர், இரட்டை குடியுரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதை காட்டிலும், வெளிநாட்டவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிப்பது பாரதூரமானது. இவ்விடயத்தில் சபாநாயகர் எவ்வாறு செயற்படுவார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், இரட்டை குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்தும் பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என சபாநாயகர் குறிப்பிடுகிறார், இல்லை இல்லை அந்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது. இவ்விரு தரப்பினரது கருத்தும் தவறானது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் நாட்டு மக்கள் எவரேனும் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யும் போது அந்த மனுவை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது மாத்திரம் உயர் நீதிமன்றத்தின் பணியாகும். நீதிமன்றத்திற்கு மனுதாக்கல் செய்யும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் இரட்டை குடியுரிமை தொடர்பில் 2017ஆம் ஆண்டு பியசேன கமகே என்பர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை உடையவர் ஆகையால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.

2017ஆம் ஆண்டு கீதா குமாரசிங்க கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் போது இரட்டை குடியுரிமை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு அவர் உண்மைத் தன்மையுடன் தான் இரட்டை குடியுரிமையாளர் என குறிப்பிட்டதன் பின்னரே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் போதுதான் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். இரட்டை குடியுரிமையாளருக்கு 19ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்களாயின் அவர்கள் உண்மையை மறைத்து, அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.

தகவலறியும் சட்டத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் இரட்டை குடியுரிமையாளர்கள் அல்ல வெளிநாட்டவர்கள் 1948ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் இலங்கை பிரஜை ஒருவர் பிற நாட்டின் குடியுரிமையை பெற்றுக் கொள்ளும் போது அக்கணமே அவரது இலங்கை குடியுரிமை இரத்தாகும்.

பின்னர் அவர்கள் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்து, இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பாலானோர் இரட்டை குடியுரிமையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளாமல், இலங்கை பிரஜைகள் என நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் பிரித்தானியாவின் குடியுரிமையை பெற்றுக் கொண்டபோது அவரது இலங்கை குடியுரிமை இரத்தாகியிருக்கும். பிரித்தானிய குடியுரிமையை பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை குடியுரிமையை அவர் மீண்டும் பெற்றிருக்க வேண்டும், அதற்கான ஆவணங்களை அவர் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டை குடியுரிமை உடையவரல்ல, அவர் வெளிநாட்டவர், இரட்டை குடியுரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதை காட்டிலும், வெளிநாட்டவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிப்பது பாரதூரமானது.

இந்தியாவின் பிரஜை பிரித்தானியாவின் பிரமராக பதவி வகிக்க முடியுமாயின், அமெரிக்க குடியுரிமையினை உடையவர் ஏன் இலங்கையில் நிதியமைச்சராக பதவி வகிக்க முடியாது என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நகைச்சுவையானது. பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் இரட்டை குடியுரிமையாளர் அல்ல அவர் பிரித்தானிய பிரஜை என்பதை ஆளும் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment