எதிர்காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படும் - தலதா அத்துகோரள - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

எதிர்காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படும் - தலதா அத்துகோரள

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இரசாயன உரத்துக்கான தடையை உடனடியாக அமுல்படுத்தியதே தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட பிரதான காரணமாகும். அதனால் இரசாயன உரத்தை தடை செய்தவர்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன் தோட்ட தொழிலாளர்களை ஊக்குவிப்பதன் மூலமே தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படும் என தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தேயிலை உற்பத்தி குறைவடைந்து, தொழிற்சாலைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரசாயன உரத்துக்கான தடையை உடனடியாக அமுல்படுத்தியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரசாயன உரத்தை தடை செய்த பின்னர், பசளை உரத்தை அங்கு தேடிக் கொள்ள முடியுமா என ஆராய்ச்சி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்கள். இதன் காரணமாக வருடத்துக்கு 350 மில்லியன் கிலோ கறுப்பு தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தபோதும் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்ட தேயிலை அளவு 209 கிலோ வரை குறைந்துள்ளது.

அத்துடன் 2021, 2022 வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், 2021 இல் 34 மில்லியன் கிலோவாகவும், இந்த வருடம் ஒக்டோபர் வரை 46 மில்லியன் கிலோ வரை குறைவடைந்துள்ளது. உரம் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும். அதனால் தேயிலை ஏற்றுமதியும் குறைவடைந்துள்ளது.

எனவே, இந்திய கடன் உதவியால் பெற்றுக் கொள்ளப்படும் இரசாயன உரத்தை விநியோகிக்கும்போது சிறுதோட்ட உரிமையாளருக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசாங்கத்தின் வரி அதிகரிப்பால் தொழிற்சாலைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின்போது 14 வீத வரி 30 வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. உற்பத்தி செலவும் பாரியளவில் அதிகரித்திருக்கின்றது.

குறிப்பாக, மின்சார கட்டண அதிகரிப்பு, போக்குவரத்து கட்டணம் அதேபோன்று தொழிலாளர்களுக்கான கூலி என செலவு அதிகரித்துள்ளது. இதனால் கறுப்பு தேயிலை 1 கிலோ உற்பத்தி செய்ய 300 ரூபா செலவாவதுடன், வரி அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டுக்கு டொலரை கொண்டுவரும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு வரி அறிவிடுவதில் நியாயம் இருக்கின்றது. அவ்வாறு எந்த நிவாரணமும் வழங்காமல் வரி அதிகரித்திருப்பதால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அதேநேரம் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முடியும்.

உரம் இல்லாமையால் அதிகமான தேயிலை தோட்டங்கள் காடாகி இருக்கின்றன. இவ்வாறான தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி, நியாயமான தொகையை கொழுந்துக்கு வழங்க வேண்டும்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்து தோட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு, தோட்டங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க வேண்டும் என தெரிவித்தோம். ஆனால், தற்போதுள்ள செலவுக்கு 1000 ரூபா போதாது. 2 ஆயிரம் ரூபா வரை வழங்க வேண்டும். என்றாலும், கம்பனிகளுக்கும் அந்தளவு வழங்க முடியாத பிரச்சினை இருக்கின்றது.

இருந்தபோதும் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்காத நிலையே ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment