டுபாயிலுள்ள திலினி பிரியமாலியின் வியாபாரம் : விசாரணைக்கு இன்டர்போலின் உதவி : நீதிமன்றுக்கு அறிவித்த சி.ஐ.டி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

டுபாயிலுள்ள திலினி பிரியமாலியின் வியாபாரம் : விசாரணைக்கு இன்டர்போலின் உதவி : நீதிமன்றுக்கு அறிவித்த சி.ஐ.டி

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி, கொழும்பு - கோட்டை கிரிஷ் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான ஜானகி சிறிவர்தன, திகோ கூறுப் நிறுவன பணிப்பாளர்களில் ஒருவரான கசுன் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 13 வரை அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை (30) உத்தர்விட்டார்.

குறித்த மூவருக்கும் பிணையளிப்பது விசாரணைகளை பாதிக்கும் எனக்கூறி நீதிவான் அவர்களது பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.

எனினும் இதுவரை விளக்கமறியலில் இருந்து வந்த பொரளை சிறிசுமன தேரர், இசுரு பண்டார ஆகியோரை பிணையில் விடுவிக்க நீதிவான் அனுமதியளித்தார்.

அதன்படி அவ்விருவரும் தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஜாஎல பகுதியைச் சேர்ந்த தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான நல்லையா ஜெயமோகன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த 6 பேருக்கும் எதிராக ஒன்றாகவும் தனித்தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்த சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள், திலினி பிரியமாலிக்கு எதிராக 7 வெவ்வேறு முறைப்பாடுகள் சி.ஐ.டி.யிக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அது குறித்து விசாரணைகள் நடப்பதாக தெரிவித்தனர்.

நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தரவுகள் ஊடாக பெறப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை மையப்படுத்தி அவ்விசாரணைகள் தொடர்வதாக அவர்கள் அறிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் திலினி பிரியமாலி, டுபாயில் ஆரம்பித்துள்ள வியாபாரம் ஒன்று தொடர்பில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வியாபார நடவடிக்கை அவரது பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வியாபாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) மற்றும் மத்திய வங்கியின் உதவியினை நாடியுள்ளதாக சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக தனியான சாட்சி சுருக்கத்தை விசாரணையாளர்கள் மன்றில் முன்வைத்தனர். இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 13 வரை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment