அரசாங்கம் இளைஞர்களை ஏமாற்ற முயற்சி என்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 26, 2022

அரசாங்கம் இளைஞர்களை ஏமாற்ற முயற்சி என்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

இளைஞர் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மாத்திரம் வரையறை செய்து, அரசாங்கம் இளைஞர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. அத்துடன் உரிமைகளுக்காக போராடும் இளைஞர்களை அரச அதிகாரங்களைக் கொண்டு அடக்கிவிடலாம் என நினைத்தால் அது ஏமாற்றமாகும் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஒரு சில தீர்மானங்களால் இளைஞர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் இளைஞர்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவ, பொலிஸ் பலத்தினாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியும் அடக்க முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது ஏமாற்றமாகும்.

இளைஞர்களின் போராட்டத்தை அரச பலத்தினால் அடக்க முற்பட்டதனால் சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாவதற்கு முன்னர் இளைஞர் போராட்டத்துக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர் ஜனாதிபதி பதவி ஏற்று சில நிமிடங்களிலேயே அந்த நிலை மாறியதை நாங்கள் கண்டோம். இதுதான் எமது நாட்டின் நிலை. இளைஞர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாராளுமன்றத்துக்கு இளைஞர் பிரதிநிதித்துவ்தை 25 வீதத்தால் அதிகக்கும் தனி நபர் பிரேரணை ஒன்றை நான் இந்த சபைக்கு கடந்த ஜூலை மாதம் கொண்டுவந்தேன். ஆனால் தற்போது எனது பிரேரணையில் ஒரு பகுதியை நீக்கிவிட்டு, இளைஞர் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வரையறுக்க முயற்சிப்பதாக தெரியவருகின்றது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதமகொரடா, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தனி நபர் பிரேரணையை கடந்த ஜூலை மாதம் கொண்டுவந்தார். ஆனால் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த மாதம் கொண்டுவந்த பிரேரணையை அரசாங்கம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, ஊடக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment