விடுதலைப் புலிகள் என தெரிவிக்கப்படும் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் என்புக்கூடுகள் மீட்பு - சயனைட் குப்பிகள், புலிகள் இலக்கத்தகடு, எறிகணையின் பாகமும் மீட்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

விடுதலைப் புலிகள் என தெரிவிக்கப்படும் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் என்புக்கூடுகள் மீட்பு - சயனைட் குப்பிகள், புலிகள் இலக்கத்தகடு, எறிகணையின் பாகமும் மீட்டெடுப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு குரவில் பகுதியில் விடுதலைப் புலிகள் என இனம் காணப்பட்ட மூன்று வகையான மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த நவம்பர் 20ஆம் திகதி, மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (30) அதனைத் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொஹான், தடயவியல் பொலிசார், கிராம அலுவலகர், பொலிசார் முன்னிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிலத்தில் தறப்பாளால் சுற்றப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் சயனைட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன. அதில் ஒரு சயனைட் முழுமையாகவும் மற்றைய இரண்டு சயனைட்களும் பகுதியளவிலும் காணப்பட்டுள்ளது.

செபமாலை ஒன்றும், ஞ என தொடங்கும் இலக்கத்தகடும் இதில் காணப்படுகின்றது. நீள காற்சட்டை, மேற்சட்டை மற்றும் பெண்களின் உள்ளாடையுடன் ஒரு எச்சமும், மற்றுமொரு எச்சம் சிறு வயதுடைய ஒருவருடையது என்றும் மற்றையது பெரியவர் ஒருவருடையது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் எறிகணை ஒன்றின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிபதி பணித்துள்ளார்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)

No comments:

Post a Comment