அவிசாவளை சீத்தாவக்கபுரவின் "வக" பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு அரச சுற்றுலா வலயமாக மாற்றுவதற்கு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கவனம் செலுத்தியுள்ளார்.
சீத்தாவக்கபுர இராசதானியின் அவிசாவளை ‘வக’ பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலா வலயமாக மாற்றுவது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் போக்குவரத்து அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.
அந்தப் பிரதேசங்களிலுள்ள சீதாவக்க தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலட்டுவன நீர்த் தேக்கங்களின் அழகிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சுற்றுலா வலயத்தை உருவாக்குவது அமைச்சரின் யோசனையாகும்.
இந்த பகுதியை பூர்வீகமாகக் கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளைப் கண்டு களிக்கும் வாய்ப்பையும் இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் பெறுவார்கள். ஏற்கனவே வார இறுதி நாட்களில் சுமார் 2,000சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு வருகை தருவதாக இந்த கலந்துரையாடலின்போது தெரியவந்தது.
சுற்றுலாப் பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ‘வக’ புகையிரத நிலையத்துக்கும், பிற்பகல் வக ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் விசேட ரயிலும் இயக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அவிசாவளை மற்றும் ஹோமாகம டிப்போக்களிலிருந்து அந்த இடங்களைப் பார்வையிடுவதற்கான விசேட பஸ் சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment