அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான தொடரும் வன்முறைகளை பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.
அரகலயவில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக காலி முகத்திடலில் 9 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது தாயையும், குழந்தையையும் பொலிஸார் பலவந்தமாக இழுத்துச் செல்வதையும், தன்னை நோக்கி வந்த கலகமடக்கு பிரிவினரிடமிருந்து தந்தை தனது பிள்ளையுடன் பின்வாங்குவதையும் நாங்கள் அச்சத்துடன் பார்த்தோம் என பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் குழந்தைகளுடன் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பெண்கள் கூட்டமைப்பு ஆண்களை போல இல்லாமல் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும்போது பிள்ளைகளையும் அழைத்து வருகின்றனர். வீட்டில் பிள்ளைகளை விட்டுவிட்டு வருவதற்கான ஆதரவு இல்லாததே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே இதனை அவர்கள் செய்கின்றனர் எனவும் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளுமே என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம் எனவும் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய செயற்பாடுகள் மறைமுகமாக இன்றி வெளிப்படையான ஜனநாயக தன்மையற்ற ஏதேச்சதிகார அரசாங்கத்தை நடவடிக்கைகளை கடுமையான விதத்தில் நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பு நாட்டில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு உள்ள உரிமையை தொடர்ச்சியாக இடைவிடாத விதத்தில் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான அனைத்து சட்டவிரோத ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவருமாறும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தும் குரல்களை நசுக்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் நாங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பட்டினியில் பாதுகாப்பு இன்மையில் துன்பத்தில் சிக்குண்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இந்த நாட்டின் மக்கள் தொடர்ந்தும் எதிர்க்கின்றனர் என்பதில் நம்பிக்கையடைகின்றோம் எனவும் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment