கடினமான ஒரு சில தீர்மானங்களை வரவு செலவு திட்டத்தின் ஊடாக செயற்படுத்த வேண்டியுள்ளமை கவலைக்குரியது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

கடினமான ஒரு சில தீர்மானங்களை வரவு செலவு திட்டத்தின் ஊடாக செயற்படுத்த வேண்டியுள்ளமை கவலைக்குரியது - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல திட்டங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிலையான தீர்வுக்காக கடினமான ஒரு சில தீர்மானங்களை வரவு செலவு திட்டத்தின் ஊடாக செயற்படுத்த வேண்டியுள்ளமை கவலைக்குரியது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பிற்கான பல் தரப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

வரவு செலவு திட்டம்,கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

மறுபுறம் கொவிட் பெருந்தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கும், பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்காமல், பொருளாதார கொள்ளைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.

சமூக கட்டமைப்பில் காணப்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல திட்டங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிலையான தீர்வுக்காக ஒரு சில கடினமான தீர்மானங்களை இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக செயற்படுத்த உள்ளமை கவலைக்குரியதாக உள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பல் தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

கடன் மறுசீரமைப்பிற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமான நிலையில் காணப்படுகிறது. எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment