(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த வேண்டி இருப்பதால் தேர்தலை பிற்போடுவதற்காக ஜனாபதி உட்பட அரசங்கம் பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் இடம்பெற்றால் இவர்கள் படுதோல்வி அடைவார்கள் என்பதனாலேயே இவ்வாறு செயற்படுகின்றனர் என எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அடுத்த வருடம் மார்ச் மாதமாகும்போது பிரதேச சபைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்கு தற்போது தேவை ஏற்பட்டிருக்கின்றது. தேர்தலை நடத்தினால் அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் படுதோல்வி ஏற்படும்.
அதனால் தேர்தல் முறைமை சரி இல்லை என தெரிவித்து தற்போது தேர்தலை பிற்போடுவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்த தேர்தல் முறையை கொண்டுவந்தது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாகும்.
நகர சபை, பிரதேச சபை தேர்தல் முறை, அதன் உறுப்பினர்கள் தொகை மற்றும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததும் அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த காலத்திலாகும்.
தற்போது திடீரெ உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை முறையானதல்ல என தெரிவிக்கிறார். இது தேர்தல் முறை பிரச்சினை அல்ல. மாறாக தேர்தலை பிற்போடுவதற்கே மேற்கொள்ளும் சதி முயற்சியாகும்.
அதனால் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம். நீதிமன்றம் நியாயமான தீர்வொன்றை வழங்கும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment