அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியில் விசேட மருத்துவர்கள் 249 பேர் ஓய்வு பெறவுள்ளதுடன் அதன் காரணமாக விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு உக்கிரமடையும் என விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயிற்சியை முடித்துக் கொண்டு எதிர்வரும் வருடத்தில் 299 பேர் நாட்டுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதன் மூலம் மேற்படி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்தாலும் அது அவ்வாறு இடம்பெறாது என விசேட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேற்படி விசேட மருத்துவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நாட்டுக்கு வருகை தரமாட்டார்களென்றும் அது வருடம் முழுவதும் இடம்பெறும் செயற்பாடு என்றும் நாட்டின் தற்போதைய நிலைக்கு இணங்க அந்த மருத்துவர்கள் அனைவரும் நாடு திரும்புவர் என எதிர்பார்க்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அந்த மருத்துவர்களில் சிலர் விசேட மருத்துவ பயிற்சியை நிறைவு செய்வதற்காக உள்நாட்டில் சில காலங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நிலையில் அவர்கள் நாடு திரும்பியதும் பதில் விசேட மருத்துவர்களாக நியமிக்க முடியாதென்று அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment