இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம், நாங்களும் ஆண்ட பரம்பரைதான் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம், நாங்களும் ஆண்ட பரம்பரைதான் - மனோ கணேசன்

மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது. மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது. நாங்கள் உழைக்க மட்டும் இங்கு வரவில்லை, ஆளவும்தான் வந்துள்ளோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு, "மலையக மக்கள் உழைப்பாளர்களாக இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 2023 ஆம் ஆண்டுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாங்கள் இங்கு உழைப்பதற்கு மட்டும் வரவில்லை. ஆளவும்தான் வந்துள்ளோம்.

கண்டி இராஜ்ஜியத்தை கடைசியாக ஆண்ட மன்னன்கூட இந்தியா வம்சாவளி தமிழர்தான். எனவே, நாங்களும் ஆண்ட பரம்பரைதான். இலங்கையில் இன்று ஒரு தேசிய இனமாக எழுச்சி பெற்றுள்ளோம்.

மலையகத்தில் இருந்து வெளியே சென்று தொழில் செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்களை தூக்கி விடுவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கான கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தை சமூக வளர்ச்சிக்காக வகுக்க வேண்டும்.

அதேவேளை, தேயிலை ஏற்றுமதி மூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. எனினும், அவற்றை பகிர்ந்து கொள்வதற்கு தோட்ட நிறுவனங்கள் தயாரில்லை. எனவே, தொழிலாளர்களுடன் வருமானங்களை பகிர்ந்து கொள்ள தோட்ட நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டும். இல்லையேல் தோட்ட நிறுவனங்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிப்போம். எங்கள் பொறுமையையும், நிதானத்தையும் எவரும் பலவீனமாக கருதிவிடக் கூடாது" என்றார்.

கிரிஷாந்தன்

No comments:

Post a Comment