ஜனாதிபதியை அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம் - மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

ஜனாதிபதியை அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம் - மஹிந்த ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிகாரர் என்று அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம். அவர் தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளார் என எதிர்பார்க்கிறோம், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ஒன்றிணைந்து எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கட்சியும், நாங்களும் அரசியல் ரீதியில் உறக்கத்தில் உள்ள போது களுத்துறையில் இடம்பெற்ற மாநாடு எமக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையினை மக்கள் நன்கு அறிவார்கள். புதிதாக குறிப்பிட வேண்டிய தேவையில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நாடு என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.

நெருக்கடிகளுக்கு தீர்வு காண கோட்டபய ராஜபக்ஷ முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதன்போது அருகில் இருந்தவர் 'ரணில் ரணில்' என குறிப்பிட்டதை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்பு விமர்சித்தோம், இன்று ஐக்கிய தேசிய கட்சி என்று குறிப்பிட்டோம். இன்று அவர் எம்முடன் உள்ளார், அதனால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம். சரியான பாதைக்கு வந்துள்ளார் என எதிர்பார்க்கிறோம். அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி தற்போதைய நெருக்கடியை வெற்றி கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment