பீனிக்ஸ் பறவை போல் அரசியலில் மீண்டும் பலம் பெறுவோம் : சஞ்ஜீவ எதிரிமான்ன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

பீனிக்ஸ் பறவை போல் அரசியலில் மீண்டும் பலம் பெறுவோம் : சஞ்ஜீவ எதிரிமான்ன

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத அரசியல் கலாசாரத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை எவருக்கும் கைப்பற்ற முடியாது. சண்டித்தனத்தால் அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் முடியாது. பீனிக்ஸ் பறவை போல் அரசியலில் மீண்டும் பலம் பெறுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

'ஒன்றிணைந்து எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட்டு ஒருபோதும் விலகமாட்டோம். நாடு என்ற ரீதியில் தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

முறையற்ற அரசியல் நிர்வாகத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பூகோள தாக்கங்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருளாதார மீட்சிக்கான உரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சண்டித்தனத்துக்கு மத்தியில்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பொதுஜன பெரமுன குறுகிய காலத்திற்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் நாட்டு மக்களின் ஆணையை முழுமையாக பெற்றுக் கொண்டது.

பல்வேறு காரணிகளினால் அரசியல் ரீதியில் பலவீனமடைந்தாலும் அரசியல் ரீதியில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

பயங்கரவாத அரசியல் கலாசாரத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை எவருக்கும் கைப்பற்ற முடியாது. சண்டித்தனத்தால் அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் முடியாது. பீனிக்ஸ் பறவை போல் அரசியலில் மீண்டும் பலம் பெறுவோம் என்றார்.

No comments:

Post a Comment