"மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார். அவரின் ஆட்சிக் காலமானது மலையகத்துக்கு பொற்காலமாக அமையும்" என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடிய தலைவராக சஜித் பிரேமதாச மாறியிருக்கின்றார்.
மக்களுக்காக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் குரல் கொடுத்து வருகின்றார். பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அதேவேளை, தீர்வுகளுக்கான வழிகளையும் கூறி, தீர்வை வழங்கியும் வருகின்றார்.
கொரோனாவின் தாக்கம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் முன்கூட்டியே சுட்டிக்காட்டினார். ஆனால் ஆளுங்கட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
பொருளாதார நெருக்கடி ஏற்பட முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறும் ஆலோசனை வழங்கினார். அதையும் அரசு ஏற்கவில்லை. இன்று நாடு வங்குரோத்தடைந்துள்ளது.
நாட்டில் உள்ள தலைவர்தான் சரியில்லை. ஆனால் நாட்டை எதிர்காலத்தில் பொறுப்பேற்கபோகும் தலைவர் நல்லவர்.
சஜித் பிரேமதாச மக்கள் தோழன். அவர் விரைவில் நாட்டின் தலைவர் ஆவார். அந்த காலம் நாட்டுக்கும், மலையகத்துக்கும் பொற்காலமாகும்." என்றார்.
கிரிஷாந்தன்
No comments:
Post a Comment