ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் : அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி நட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் : அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி நட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 2011ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் ஊழியர்களை உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்தது.

குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர், பிரதிவாதிகளான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ச.தொ.ச.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் ச.தொ.ச.வின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஹாஜா மொஹிதீன் மொஹமட் சாகிர் ஆகிய மூவரையும் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணைக்கமைவாகவே விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த குற்றப் பத்திரிகை மற்றும் விசாரணை தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் முதலாம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment