ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான ஏரோஃப்ளோட் (Aeroflot) விமானமொன்று இன்று (10) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அந்த வகையில், மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான சேவையை 4 மாதங்களுக்கு பின்னர் Aeroflot விமானம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நேற்றையதினம் (09) இரவு ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் இன்று (10) முற்பகல் 10.10 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் Aeroflot விமானமொன்றை இலங்கையில் தடுத்து வைத்த சம்பவத்தை தொடர்ந்து, அது தனது இலங்கைக்கான சேவைகளை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இலங்கைக்கான தமது சேவையை மீண்டும் நேற்று (09) முதல் ஆரம்பிக்குமென, சுற்றுலா மற்றும் அரச காணிகள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்த அவர், Aeroflot விமான சேவையானது, வாரத்துக்கு 2 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுளார்.
அத்துடன் ரஷ்யாவின் மிகப் பெரிய விமான சேவையான Azur Air விமான சேவை நிறுவனத்துக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாராந்தம் 4 விமான சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை குறிப்பிடும் வகையில் அதிகரிக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ஹரின் பெனாண்டோ, இது தொடர்பில் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment