சபாநாயகர் பதவிக்கு பெண் உறுப்பினரை நியமிக்கும் வகையில் 22 ஆம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

சபாநாயகர் பதவிக்கு பெண் உறுப்பினரை நியமிக்கும் வகையில் 22 ஆம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரை

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கக் கண்ணோட்டத்தில் கலந்துரையாடலொன்றை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடத்தியது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சட்ட மூலத்தின் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டும் அதேவேளை, அரசியலமைப்புப் பேரவையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஒதுக்கீடும் திருத்தத்தினால் வழங்கப்படவில்லை என்றும் பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்புப் பேரவை உள்ளிட்ட தீர்மானமெடுக்கும் நிறுவனங்களுக்கு பெண்களை உள்வாங்க அனுமதிக்கும் வகையிலான ஒதுக்கீட்டை அரசியலமைப்பில் சேர்த்து சட்ட மூலம் திருத்தப்படவேண்டும் என்பது ஒன்றியத்தின் கருத்தாக இருந்தது.

அத்துடன் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

அத்துடன் பெண்களுக்கான சம உரிமைக்குத் தடங்கலாக உள்ள தனியார் சட்டங்கள் உள்ளிட்ட பழைய சட்டங்களை 16 ஆம் உறுப்புரையின் கீழ் பேணுவதால் ஏற்படும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்பின் அடிப்பைடை உரிமைகள் அத்தியாயத்தில் விசேடமாக 12 ஆம் உறுப்புரை அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் 16 ஆம் உறுப்புரை திருத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, ரோஹிணி விஜேரத்ன, ரஜிகா விக்ரமசிங்க, மஞ்சுளா திசாநாயக்க மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment