(என்.வீ.ஏ)
நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் நாடு திரும்பிய நேபாள கிரிக்கெட் நட்சத்திரம் சந்தீப் லமிச்சானை காத்மண்டு பொலிஸார் கைது செய்தனர்.
காத்மண்டு விமான நிலையத்தை லமிச்சான் வந்தடைந்ததும் அவரை கைது செய்ததாக காத்மாண்டு மாவட்ட பொலிஸ் பேச்சாளர் தினேஷ் ராஜ் மைனாலி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு திரும்புவதாக இதற்கு முன்னர் தனது பேஸ்புக்கில் லமிச்சான் பதிவிட்டிருந்தார்.
'விசாரணையின் சகல கட்டங்களிலும் நான் முழுமையாக ஒத்துழைப்பேன், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவேன். நீதி வெல்லட்டும்' என்று லமிச்சான் பதிவிட்டுள்ளார்.
காத்மண்டு நீதிமன்றத்தினால் லமிச்சானுக்கு கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நேபாள கிரிக்கெட் அணித் தலைவர் பதவியில் இருந்து லமிச்சான் நீக்கப்பட்டார்.
காத்மண்டு ஹோட்டல் அறை ஒன்றில் 22 வயதான லமிச்சான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி சுமத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்தே நீதிமன்றத்தினால் அவர் மீது பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது.
கரிபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததால் ஜமெய்க்காவிலிருந்து லமிச்சான் நேபாளத்திற்குத் திரும்பாமலிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேபாளத்திற்கு 2018 இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்காக லமிச்சான் சுவரொட்டி விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்து வந்தார்.
இண்டியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினால் 2018 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் சுழல்பந்து வீச்சாளரான லமிச்சானின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் இருபது 20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விளையாடி வரும் நேபாள கிரிக்கெட் வீரராக லமிச்சான் இருந்து வருகிறார்.
இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கடந்த மாதம் மீண்டும் வலியுறுத்திய லமிச்சான், நேபாளத்திற்குத் திரும்புவதில்லை என்ற தனது தீர்மானம் சரியானது எனவும் சமூக ஊடக வலையமைப்பில் குறிப்பிட்டிருந்தார்.
'என் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்து பற்றிய செய்தி எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்று என்னால் சிந்திக்க முடியவில்லை' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
'எனது உடல்நிலை படிப்படியாக தேறி வருகிறது, மேலும் (குற்றச்சாட்டுகளுக்கு எதிராக) கடுமையாக எதிர்த்து போராட நான் கூடிய விரைவில் நேபாளத்திற்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன்' என சமூக வலையமைப்பில் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து லமிச்சானை நேபாளத்திற்கு திரும்ப செய்வதற்கு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் இன்டர்போலின் உதவியை நாடியதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேபாளத்தில் சுமார் 2,300 பாலியல் வன்முறை வழக்குகள் கடந்த நிதியாண்டில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர். ஆனால், இன்னும் பல பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
#MeToo இயக்கத்தின் போது நேபாளத்தில் ஒரு சில பெண்கள் மட்டுமே குரல் எழுப்பினார்கள். ஆனால், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சிறிய அளவில் தண்டிக்கப்பட்டதுடன் சிலர் எந்தவிதமான விளைவுகளையும் எதிர்கொள்ளவில்லை.
சிறுமி ஒருவரை பிரபல நேபாள நடிகர் பால் ஷா பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து லமிச்சானே மீதான குற்றச்சாட்டுகள் தொடரப்பட்டது.
அந்த நடிகருக்கு இரண்டரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இது இவ்வாறிருக்க, ஆர்வமுள்ள மாடல் அழகி ஒருவர் தனது சிறுபராயத்தில் தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகத்தை விவரிக்கும் டிக்டோக் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி காத்மண்டுவில் கடந்த மே மாதம் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment