தொங்கு பாலம் அறுந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இதுவரை 141 பேர் பலி : 177 பேர் உயிருடன் மீட்பு, மேலும் பலரை தேடும் பணி தொடர்கிறது - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

தொங்கு பாலம் அறுந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இதுவரை 141 பேர் பலி : 177 பேர் உயிருடன் மீட்பு, மேலும் பலரை தேடும் பணி தொடர்கிறது

குஜராத் மாநிலத்தின் மோர்பி என்ற இடத்தில் தொங்கு பாலமொன்று அறுந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் பொலிஸ்மா அதிபர் அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (30) மாலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தின் போது குறித்த பாலத்தில் சுமார் 500 பேரளவில் இருந்துள்ளதோடு, எல்லையை மீறி அதிகளவானோர் அதில் பயணித்ததால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து 177 பேர் குறித்த பாலம் வீழ்ந்த மச்சு ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில் தேசிய அனர்த்த மீட்பு குழுவினர், விமானப் படை, இராணுவம், கடற்படை ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் 200 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக, குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி சங்க்வி தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். இந்த பாலம் நேற்று மாலை 6.40 மணியளவில் இடிந்து விழுந்தது.

"குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை என்பதால் பாலத்தை காண பலர் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்" என சம்பவத்தை நேரில் பார்த்த சுக்ராம் ராயட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

"ஒருவர் மீது ஒருவர் என அனைவரும் கீழே விழுந்தனர். அதிக கூட்டம் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது," என அவர் தெரிவித்தார்.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

பல தசாப்தங்கள் (143 வருடங்கள்) பழமை வாய்ந்த பிரிட்டிஷ் காலத்து குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்களில் அதிகளவானோர் குழந்தைகளாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த சோகத்தால் தான் மிகவும் வருத்தமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் ஜனாதிபதி திரௌபதி மூர்முவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்துடன் புனரமைக்கப்பட்ட பாலம்
தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது.

மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது.

மோர்பி நகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், இந்த பாலம் பொறியியலின் அதிசயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் 1.25 மீற்றர் அகலமும் 233 மீற்றர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது.

No comments:

Post a Comment