புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் அனைவரும் அச்சம் களைந்து இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென அறைகூவல் விடுப்பதாக ஜேர்மனியிலிருந்து இலங்கை வந்துள்ள புலம்பெயர் முதலீட்டாளர்களில் ஒருவரான மாட்டின் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப உதவி ஒத்துழைப்புகளை நல்க முன்வருமாறு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள புலம்பெயர் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சந்திப்பைத் தொடர்ந்து கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இன்று எமது தாய் நாடு பொருளாதார ரீதியில் மிகவும் சிரமமான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் பேரில் சுவிட்சர்லாந்தைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் 05 நாடுகளில் பணிகளை முன்னெடுக்கும் எமது பைனஸ் நிறுவனத்தினூடாக நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
எமது நிறுவனத்தின் தலைவர் விக்னேஷ்வரன் சிவபாதத்தின் எண்ணக்கருவுக்கமைய இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இந்நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கு உதவி ஒத்துழைப்புகளை நல்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதன் நிமித்தம் நாட்டுக்கு வெளியே புலம் பெயர்ந்துள்ள சகல மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப விரும்புகின்றோம்.
இதேவேளை, வவுனியாவில் மூன்று இடங்களில் கோழி வளர்ப்புப் பண்ணை திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இங்கு சுமார் 20,000 கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதேநேரம் மரவள்ளிக் கிழங்கை மாவாக்கி ஏற்றுமதி செய்தவற்கான தொழிற்சாலையொன்றை பத்து கோடி ரூபா முதலீட்டுடன் அமைத்து வருகின்றோம். மரவள்ளிக்கிழங்கு மாவுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கிராக்கியுள்ளது. அதனை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும், வடக்கு கிழக்கில் சோளச் செய்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம். இதற்கு தேவையான காணிகளை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். காணிகள் ஒதுக்கப்பட்டதும் இவ்வேலைத்திட்டத்தை எம்மால் ஆரம்பிக்க முடியும்.
சோளச் செய்கையை இங்கு விரிவாக முன்னெடுப்பதன் ஊடாக திரிபோஷா மற்றும் விலங்கு தீவனத் தயாரிப்பை இங்கேயே போதியளவில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம். கோழித் தீவனமாகட்டும், மாட்டுத் தீவனமாகட்டும் அவற்றை உற்பத்தி செய்ய சோளம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
அந்த மூலப்பொருளை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்து அதனைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதனைச் செய்ய முடியும். குறிப்பாக நெத்தலிக் கருவாடு, சிப்பி மற்றும் உளுந்து உள்ளிட்ட தானியங்கள் என்பன எமது நாட்டிலேயே கிடைக்கக்கூடியனவாக உள்ளன.
அவற்றைக் கொண்டு தரமான கால்நடை தீவனத்தை இங்கேயே தயாரிக்கக் கூடியதாக இருக்கும். அதனூடாக இத்துறையில் தன்னிறைவு அடைய முடிவதோடு அவற்றின் இறக்குமதியையும் நிறுத்தி அவற்றுக்கு செலவாகும் பெருந்தொகை அந்நியச் செலாவணியையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும்.
அதேநேரம் விவசாயத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு விவசாயப் புரட்சியை ஏற்படுத்தவும் பங்களிக்க எதிர்பார்த்துள்ளோம். மரவள்ளிச் செய்கைக்காக வவுனியாவில் சுமார் 2,500 ஏக்கர் காணியை எதிர்பார்த்துள்ளோம். சோளச் செய்கைக்கென கிரானில் 637 ஏக்கர் காணியையும் பார்வையிட்டுள்ளோம்.
அத்தோடு கடற்றொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பி தன்னிறைவு பொருளாதாரத்தை அடைய முடியும்.
புலம்பெயர்ந்துள்ளவர்கள் தயாகம் திரும்பவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமக்கு தேவையான உதவி ஒத்துழைப்புகளை வழங்க அரச தலைவர்களும் உயரதிகாரிகளும், வெளிநாட்டு குடியகல்வாளர்கள் பராமரிப்பு அமைப்பும் (பி.கோ) பைனஸ் நிறுவனமும் தயாராக உள்ளது.
ஆகவே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள இலங்கையரைத் தாயகத்தில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டை ஒன்றுபட்டுக் கட்டியெழுப்ப முன்வருமாறு கேட்டுக்கொள்ளுகிறேன் என்று குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பைனஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களான பி. ஜோன் வசந்தபாலன், என்.எம்.எம். சபீஹ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மர்லின் மரிக்கார்
No comments:
Post a Comment