இளம் தலைமுறையினர் நாட்டையும் நாட்டு மக்களையும் சூழலையும் நேசிக்க தவறுவார்களேயானால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாதென ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மனிதாபிமானம் சிறந்து விளங்கிய எமது நாட்டில் மனிதர், மனிதர்களை படுகொலை செய்யுமளவுக்கு மனிதாபிமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது போன்ற குரோத மனப்பான்மைகள் மாற்றப்பட வேண்டுமென்றும் அதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக அகடமியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட, கல்விமான்கள், பேராசிரியர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், லேக்ஹவுஸ் நிறுவனம் பத்திரிகைகளின் தாய்வீடாக விளங்குகின்றது. நாட்டு மக்களுக்காக டி.ஆர்.விஜேவர்த்தனவினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம் மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிடுவதுடன் நாட்டின் சுதந்திரத்தின் போது அதற்காக பெரும் பங்களிப்பு வழங்கிய நிறுவனமாக செயற்பட்டுள்ளதைக் குறிப்பிட முடியும்.
அந்த வகையில் தேசியத்துக்கு முக்கியத்துவமளித்து மனிதாபிமானத்தை மதித்து செயற்படும் நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆரம்ப பத்திரிகை ஆசிரியர்களான மார்டின் விக்கிரமசிங்க போன்றோரையும் சிறப்பாக குறிப்பிட முடியும்.
எமது கலாசாரம் மனிதத்தன்மை அருகிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மூலம் அதனை மீளக்கொணரமுடியும் என்பதே எமது நம்பிக்கை. குரோதம் நிறைந்ததாக ஒருவரையொருவர் படுகொலை செய்வது வரை எமது கலாசாரம் மற்றும் பண்பாடு மாற்றம் பெற்றுள்ள சூழலையே தற்போது காணமுடிகிறது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நான் கசகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச சினிமா விருது விழாவில் கலந்துகொண்டிருந்தேன். அதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அதில் பங்கேற்றிருந்தனர். அவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் என்னிடம் உங்கள் நாட்டு விமான நிலையத்துக்கான பாதைகள் தடை செய்யப்படுகின்றதா? அவ்வப்போது கடவுச் சீட்டுக்கள் அதிகாரமில்லாதவர்களால் பரிசோதனை செய்யப்படுகின்றதா? எந்த நேரத்திலும் வன்முறைகள் இடம்பெறுக்கின்றன. மக்களைத் தாக்கியும் படுகொலை செய்தும், குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த நிலையில் உங்கள் நாட்டுக்கு நாங்கள் வருகை தந்தால் எங்கள் பாதுகாப்பு தொடர்பில் உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்றும் அவர்கள் என்னிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
நான் அதற்குப் பதிலாக, சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. இப்போது அங்கு சகஜநிலை காணப்படுகிறது என்று தெளிவு படுத்தினேன்.
ஊடகங்களானது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியம். நாம் கல்வி கற்ற காலத்தில் சிறந்த படிப்பினைகள் எமக்குக் கிடைத்தன.
தற்போது அப்படியான நிலைமைகள் மிகவும் அருகிவிட்டது. நாட்டில் புதிதாக பிறக்கும் பிள்ளைகள் தமது நாட்டுக்கும் மக்களுக்கும் சூழலுக்கும் அன்பு செய்யாவிட்டால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது போகும்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக அகடமி சிறந்த துறை சார்ந்த விற்பன்னர்களின் பங்களிப்புடன் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த நிறுவனத்தில் பாரிய வளங்கள் உள்ளன. அதனை உபயோகித்து கற்கும்போதே வேலை செய்வது, வேலைசெய்யும் போதே கற்பது என இரண்டையும் பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
உலகில் கற்பிப்பதே சிறந்த தொழிலாகும். அந்தவகையில் பேராசிரியர், கல்விமான்கள் பலரும் இந்த அகடமியில் கற்பித்தலில் ஈடுபடவுள்ளனர். இந்த அகடமி மேலும் ஒரு படி உயர்ந்து ஒரு வெளியீட்டகமாகவும் முன்னேற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment