பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவுக்கு எதிரான பரிந்துரைகள் : அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானங்களை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 29, 2022

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவுக்கு எதிரான பரிந்துரைகள் : அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானங்களை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) எழுத்தாணை (ரிட் ஆணை) பிறப்பித்தது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்து, மேன் முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தே இவ்வாறு எழுத்தாணை பிறப்பித்தது.

அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய குறித்த பரிந்துரைகளை அமுல் செய்ய கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியையும் ரத்து செய்து மேன் முறையீட்டு நீதிமன்ற எழுத்தாணை பிறப்பித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல பத்மகுமார தலைமையிலான டி.எம். சமரகோன் மற்றும் லபார் தாஹிர் ஆகிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய மூவர் கொண்ட குழாம் இதற்கான தீர்ப்பை அளித்துள்ளது.

முன்னதாக குறித்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்ரசிறி ஜயதிலக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்ரா பெர்ணான்டோ, ஆணைக்குழுவின் செயலாளர், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சரவையின் செயலாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் ஏதேனும் வகையில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின், அதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், சட்டமா அதிபரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அவற்றின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் குற்றவாளிகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை சட்ட விரோத செயல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செயற்பட்டதனூடாக வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாக மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகையால், ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாதிருக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கடந்த மார்ச் 18 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்ப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment