மியன்மாரின் உத்தியோகபூர்வ அரச இரகசிய சட்டத்தினை மீறியமைக்காக அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டனலிற்கு மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளனர்.
மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகியின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அவுஸ்திரேலியருக்கே மியன்மாரின் ஆட்சியாளர்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளனர்.
அவர் 2021 பெப்ரவரியில் இராணுவ சதிப்புரட்சியின் போது கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்துள்ளார்.
மியன்மார் தலைநகரில் உள்ள இராணுவ நீதிமன்றத்தின் மூடிய கதவுகளின் பின்னால் அவருக்கு எதிரான நீதி விசாரணைகள் இடம்பெற்றன.
அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் ஊடகங்களிற்கும் நீதிமன்றத்திற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் சட்டத்தரணிகள் பகிரங்கமாக கருத்து கூறுவது தடுக்கப்பட்டது.
இந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கின்றது என அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணரின் மனைவி ஹ வூ தெரிவித்துள்ளார்.
எனக்கும் எனது மகளிற்கும் சீனின் 85 வயது தந்தைக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் எனது கணவர் பேராசிரியர் சீன் டனலிற்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தின் மூன்றில் இரண்டு வருட காலம் ஏற்கனவே அவர் சிறையிலிருந்து விட்டார் அவர் மியன்மாருக்கு வழங்கிய பங்களிப்பை கருத்தில் கொண்டு அவரை அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்த வேண்டும் எனவும் பேராசிரியரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 மாதம் சிறையிலிருக்கும் அவுஸ்திரேலிய பேராசிரியர் 2024 வரை சிறையிலிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் சிறையில் உள்ள காலம் கருத்தில் எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.
மியன்மார் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி ஐந்து நாட்களின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment